March 2025

 கிழக்கு மண்டலம்


அருவல் மாவட்டத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான உபவாசக்கூடுகையில், அருவல், பாளிதாத், கலேர் மற்றும் டேல்பா பணித்தளங்களைச் சேர்ந்த 108 விசுவாசிகள் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் மாவட்டத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். இக்கூடுகையில் சகோ. ஜெயபிரகாஷ் மற்றும் தேவ ஊழியர்கள் கலந்துகொண்டு தேவசெய்தியளித்து, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினர்.

மகய்-1 கோட்டத்தின் மசௌடி மற்றும் ஷேக்புரா பணித்தள ஆலயங்களில் நடைபெற்ற முழு இரவு ஜெபங்களில், பணித்தள மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் பல்வேறு ஜெப விண்ணப்பங்களுக்காகவும் ஜெபித்தனர்.

ராஜ்கிர் பணித்தள ஆலயக் கட்டுமானத்திற்கான அரசு அனுமதி கிடைக்க உதவிசெய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்; இப்பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படவும், விடுதலையோடு ஜனங்கள் தேவனை ஆராதிக்கவும் ஜெபிப்போம். 

குர்தா சபையில் பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற உபவாசக் கூடுகையில், 70 விசுவாசிகள் பங்கேற்றனர்; இக்கூடுகையில், சகோ. ஜெய்பிரகாஷ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். 

சியராம்பூர் பணித்தளத்தின் சமூகப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான சிறப்புக் கூட்டத்தின்போது, பாடல், பொம்மலாட்டம், கதை மற்றும் வேத வசனங்கள் மூலமாக, 44 சிறுவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது.

ராஜவரியா பணித்தளத்தில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில், சகோ. தயானந்தன் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார்; இக்கூட்டங்களில், 160 பேர் பங்கேற்று தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றனர். 

பிப்ரவரி 12 முதல் 14 வரையிலான மூன்று நாட்கள், கயா பணித்தள ஆலயத்தில் யோவான் சுவிசேஷப் புத்தகத்திலிருந்து சகோ. ஜிபுராஜ் மூலமாக வேதாகம வகுப்புகள் நடத்தப்பட்டன. 60-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் இவ்வகுப்புகளில் பங்கேற்றனர். விசுவாசிகள் சத்தியத்தை அறிந்துகொள்ளவும், தவறான உபதேசங்களை அடையாளம் கண்டுகொள்ளவும் இவ்வகுப்புகள் பிரயோஜனமுள்ளதாயிருந்தன.

மகத் காலனியின் அருகிலுள்ள மூஸ்தாபாத் கிராமத்தின் சிறுபிள்ளைகளுக்கு, பாடல்கள் மற்றும் வேதாகமக் கதைகள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். 

ராஜ்கிர் ஆலயக் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படவும், லோகர்தகா பணித்தள போதகர் இல்லக் கட்டுமானப் பணி விரைவில் தடையின்றி முடிக்கப்படவும் ஜெபிப்போம்.