April 2026
March 2026
மார்ச் 1 : மகய் 2 கோட்டம், ஹிஸ்வா பணித்ததளத்தில் நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில், சுமார் 40 விசுவாசிகள் கலந்துகொண்டு, தங்கள் சபைக்காகவும், தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். இப்பணித்தளத்தில் 20 ஆண்டுகளாக ஊழியம் நடைபெற்றுவந்தபோதிலும், இன்னமும் ஆலயம் கட்டப்டவில்லை. தற்போது விசுவாசி ஒருவரின் வீட்டு மாட்டுத் தொழுவத்தின் ஒரு பகுதியில் ஞாயிறு ஆராதனை நடைபெற்றுவருகிறது, இப்பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படவும், ஜனங்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்கவும் ஜெபிப்போம்.
மார்ச் 2 : ஹன்டர்கன்ச் பணித்தளத்தில் பிப்ரவரி 1 அன்று நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 80 பேர் பங்கேற்றனர்; 'கனிகொடுத்தல்” என்ற தலைப்பின் கீழ் சகோ. பால் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். விசுவாசிகள் தங்கள் ஜீவியத்தில் ஆவிக்குரிய குணங்களான நல்ல கனிகளை வெளிப்படுத்தவும், அதன் மூலமாக அநேகரை கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தவும் உற்சாகப்படுத்தப்பட்டனர். இப்பணித்தளத்தின் சபை ஊழியர் சன்ஜித்திற்காகவும் மற்றும் விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.
மார்ச் 3 : மகய் கோட்டம் மசோடி பணித்தளத்தில் பிபரவரி 7ம் தேதி நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் சகோதரி ஜாஸ்மின் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார்; சகோதரி அர்ச்சுனா கூடிவந்தோரை ஜெபத்தில் வழிநடத்தினார். 80-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் இக்கூடுகையில் கலந்துகொண்டனர். தங்களது குடும்பத்தில் பெண்கள் எவ்வாறு சாட்சியாக இருக்கவேண்டும் என்று போதிக்கப்பட்டதுடன், கூட்ட முடிவில் பங்கேற்றோரின் குடும்ப அங்கத்தினரின் இரட்சிப்பிற்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. சபைகளில் பெரும்பாலும் பெண்கள் அதிகமாக ஆண்டவரை அறிந்துகொள்ளுகின்றபோதிலும், வரும் நாட்களில் குடும்பமாக அவர்கள் ஆண்டவரை ஆராதிக்க ஜெபிப்போம்.
மார்ச் 4 : கிழக்கு மண்டலத்தின் ஜெகனபாத் மாவட்டத்திலுள்ள மதார்பூர் மற்றும் கயா மாவட்டத்திலுள்ள மான்பூர் பணித்தளங்களில், ஜெபிக்கிற சேனையை உருவாக்குவதற்கான 2 நாள் பயிற்சி முகாம் பிப்ரவரி 3 மற்றும் 7 ஆகிய தினங்கள் நடைபெற்றன; இம்முகாமில் சகோ. ஹென்றி மற்றும் சகோ. ஜெயக்குமார் கலந்துகொண்டு விசுவாசிகளும் மற்றும் ஊழியர்களும் ஜெப வாழ்க்கையில் வளர பயிற்சியளித்தனர். ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் விசுவாசிகள் தங்கள் சபைக்காகவும், மாவட்டத்திற்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஊக்கமுடன் ஜெபித்தனர். தொடர்ந்து விசுவாசிகள் தங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப ஜெபத்தில் முன்னேற ஜெபிப்போம்.
மார்ச் 5 : கோடர்மா பணித்தளத்தின் அசனாபாத் கிராமத்தில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது; சகோதரி. சாரா கிராம மக்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனையையும், சுகாதாரத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அத்துடன், கயா சிட்டி சர்ச்சிலும் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. ராஜ்கிர் மற்றும் ராஜொலி பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெற ஜெபிப்போம்.
Feb 2026
பிப்ரவரி 2 கயா பட்டணத்தின் ஜெம்ஸ் சிட்டி சர்ச் மூலமாக தொழுநோய் மருத்துவமனையின்
உள்நோயாளிகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டு, இலவசமாக கம்பளிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியினை, கயா பணித்தள
விசுவாசிகள் உற்சாகமாக நிறைவேற்றினர்; கயா பட்டணத்தின் வார்டு கவுன்சிலர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் மருத்துவமனை ஊழியங்கள் மூலமாக நோயாளிகள்
சந்திக்கப்படவும் மற்றும் நோயாளிகள் சுகம் பெற்று கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக
மாறவும் ஜெபிப்போம்.
பிப்ரவரி 3 மகய் - 2 கோட்டத்தின்
டெக்காரி பணித்தளத்தின் தெதரியா கிராமத்தில் புதிதாக வீட்டு சபை தொடங்கப்பட்டது;
இதில், 40 விசுவாசிகள் கலந்துகொண்டு தேவனை ஆராதித்தனர்.
கிழக்கு மண்டலத்தின் கோட்டங்களுக்கான வருடாந்திர ஊழியத் திட்டமிடுதல் கூடுகைகளை
கோட்ட அலுவலகங்களில் நடத்த கர்த்தர் உதவிசெய்தார். திட்டமிடப்பட்ட ஊழியப் பணிகள்
வரும்நாட்களில் தடையின்றி செய்யப்படவும், புதிய கிராமங்களில் சுவிசேஷத்திற்கான வாசல்கள் திறக்கவும் ஜெபிப்போம்.
பிப்ரவரி 4 ஹசாரிபாக் மாவட்டத்தின் குந்துரு பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 25 பேர் கலந்துகொண்டனர்; சகோதரர் சித்தார்த் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். இப்பணித்தள ஊழியர் சகோ. விஷ்ணு தொடர்ந்து சந்தித்துவரும் எதிர்ப்புகள் மாறவும், ஊழியர் தங்கியிருந்த வீட்டினைக் காலிசெய்ய வற்புறுத்தப்பட்ட நிலையில், தங்குவதற்கு வீடு கிடைக்கவும், எதிர்ப்பாளர்களைக் கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.
பிப்ரவரி 5 கயா மாவட்டத்தின் குராரு பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லம் ஜனவரி 7 அன்று ஜெபத்துடன் அர்ப்பணிக்கப்பட்டது; தொடர்ந்து நடைபெற்ற ஆராதனையில் சகோ. ஜோ பால்சன் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். பணித்தள ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கயா மாவட்டத்தின் பதேபூர் பணித்தளத்தில் ஆலயத்தின் மின்சார உபகரணங்கள் உடைக்கப்பட்டு, ஊழியர் மிரட்டப்பட்டு, ஊழியரின் இல்லத்தையும் காலிசெய்ய வற்புறுத்தியுள்ளனர். இப்பணித்தளத்தில் தொடர்ந்துவரும் எதிர்ப்புகள் மாற ஜெபிப்போம்.
Jan 2026
December 2025
கிழக்குமண்டலம்
டிசம்பர் 01 ஜுரியா பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூடுகையில், ‘ஆண்டவரின் ஐக்கியத்தில் வளருதல்” என்ற தலைப்பின் கீழ் சகோ. பிலிப் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார்; 105 பேர் இக்கூடுகையில் பங்கேற்றனர். இக்கூடுகையில் கலந்துக்கொண்ட ஒவ்வொருவரும் ஆண்டவரின் ஐக்கியத்தில் வளரவும் மற்றும் அவர்களது ஆவிக்குரிய ஜீவியத்திற்காகவும், இப்பணித்தளத்தில் ஊழியம்செய்து வரும் சகோ. விஜய் மற்றும் சகோதரி குஷ்பு ஆகியோருக்காகவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 02 மான்பூர், அக்பர்பூர் மற்றும் கயா பணித்தளங்களில் நடைபெற்ற சிறப்புக் கூடுகைகளில் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேசத்திற்காகவும், பணித்தள மக்களின் இரட்சிப்பிற்காகவும் விசுவாசிகள் ஒருமனதோடு ஜெபித்ததுடன், விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும் வசனங்களை அடிப்படையாகக் கொண்டு தேவ செய்தியுடன் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. கலந்துகொண்ட விசுவாசிகள் தொடர்ந்து தேசத்திற்காக திறப்பில் நிற்கவும் மற்றும் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளரவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 03 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 16 அன்று பணித்தள ஆலயங்களில் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் மூலமாக நடைபெற்ற ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். சிறுவர் சிறுமியர் கரங்களில் கர்த்தருக்குக் காணிக்கை படைக்க உண்டியல்கள் வழங்கப்பட்டு, அதன் மூலமாக புதிய கிராமங்களில் வரும் நாட்களில் ஏடீளு நடத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.
டிசம்பர் 04 அக்பர்பூர் பணித்தளத்திற்கு அருகிலுள்ள காளேஜா கிராமத்தில் நவம்பர் 5 அன்று நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தில் 50 பேர் கலந்துகொண்டனர். ஜெப வேளையின்போது, கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்ட 10 பேர் தொடர்ந்து திருச்சபைக்கு வர ஆயத்தமாயிருக்கின்றனர். இத்தகைய கூட்டங்கள் ஒவ்வொரு பணித்தள ஆலயத்திலும் வரும் நாட்களில் நடைபெறவும், ஆத்துமாக்கள் சபையில் சேர்க்கப்படவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 05 மான்பூர் பணித்தளத்தில் நவம்பர் 19 அன்று ஜெம்ஸ் மருத்துவக் குழுவினரும் மற்றும் ர்யனௌ ழக ர்ழிந மருத்துவக் குழுவினரும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமின் மூலமாக 277 கிராம மக்கள் பயனடைந்தனர். மருத்துவ சிகிச்சையுடன், கிறிஸ்துவின் அன்பை அறிவிக்கும் சுவிசேஷக் கைப்பிரதிகளும் வழங்கப்பட்டன. இம்மருத்துவ முகாமில் பயனடைந்தோர், இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொள்ள ஜெபிப்போம்.
டிசம்பர் 06 டோபி பணித்தளத்தில் நவம்பர் 21 அன்று நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்களில், ஐந்து திருச்சபைகளைச் சேர்ந்த 160 விசுவாசிகள் கலந்துகொண்டனர். ‘கர்த்தரில் பெலப்படுங்கள்’ என்ற தலைப்பின் கீழ் சகோ. ஜெயசீலன் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றவர்களுக்காக ஜெபித்தார். பணித்தள விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் மற்றும் வரும் நாட்களில் ஆத்தும அறுவடையாளர்களாக அவர்கள் மாறவும் ஜெபிப்போம்.
November 2025
கிழக்குமண்டலம்
நவம்பர் 1 டெக்காரி மற்றும் மான்பூர் ஆகிய பணித்தளங்களில், 'ஆயத்தமாயிருங்கள்" என்ற கருப்பொருளின் கீழ், ஜெம்ஸ் பெண்கள் ஊழியங்களின் (GEMS WET) மூலமாக நடத்தப்பட்ட பெண்கள் கூடுகையில் 162 சகோதரிகள் கலந்துகொண்டனர். பாடல் மற்றும் ஆராதனை வேளைகளைத் தொடர்ந்து, பல்வேறு ஜெபக்குறிப்புகளுக்காக ஜெபிக்கவும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளவும் ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்ளவும் அத்துடன் தேவ செய்தியைக் கேட்கவும் இக்கூடுகையின்போது சகோதரிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. இக்கூடுகையினைத் தொடர்ந்து, ஒவ்வொரு பணித்தள சபையிலும், இரண்டு சகோதரிகள் பணித்தள பெண்கள் ஊழியங்களைத் தொடர அர்ப்பணிக்கப்பட்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் பெண்கள் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஜெம்ஸ் பெண்கள் ஊழியக் குழுவினருக்காகவும் ஜெபிப்போம்.
நவம்பர் 3 ஷேக்பூரா, காக்கோ, மக்தம்பூர் ஆகிய பணித்தளங்களில் 'வாழ்க்கையின் நோக்கம்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 246 பேர் கலந்துகொண்டனர்; சகோ. வென்னிலவன் மற்றும் குழுவினர் தேவ செய்தியுடன் பாடல்கள், ஆலோசனைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக வாலிபரை கிறிஸ்துவண்டை நடத்தினர். காக்கோ பணித்தளத்தில் 18 வாலிபர்கள் ஊழியத்திற்கென்று தங்களை அர்ப்பணித்தனர். தொடர்ந்து, கூடு, சந்துவா, மன்டர் பணித்தளங்களில் அக்டோபர் 16 முதல் 18 வரை நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 306 வாலிபர் பங்கேற்றனர். 'பிதாவினிடத்திற்குத் திரும்புங்கள்" என்ற கருப்பொருள் அடங்கியச் செய்தியினைத் தொடர்ந்து வாலிபர்களுக்கேற்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இக்கூடுகையின்போது, 12 வாலிபர் ஊழியத்திற்கென்று தங்களை அர்ப்பணித்தனர். அர்ப்பணித்த வாலிபர்கள் அர்ப்பணிப்பில் நிலைத்து நிற்கவும், விசுவாசத்தில் வளரவும் ஜெபிப்போம்.
நவம்பர் 4 அன்டர்கன்ஜ் பணித்தளத்தில் அக்டோபர் 19 அன்று நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 75 பேர் கலந்துகொண்டனர். 'சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள்" என்ற தலைப்பில் சகோ. பால் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். இக்கூட்டங்களில் பங்கேற்றோர் வேத வசனத்தின்படி வாழவும், அப்பணித்தளத்தின் எழுப்புதலுக்குக் காரணமாகவும் ஜெபிப்போம்.
நவம்பர் 5 தெத்தர்டாட் பணித்தளத்தில் அக்டோபர் 10 அன்று நடைபெற்ற பெண்கள் கூடுகையில் ' புத்தியுள்ள ஸ்திரீ " என்ற தலைப்பின் கீழ் சகோ. சுஸ்மா சொயம்பர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார்; இக்கூடுகையில் 49 பேர் கலந்துகொண்டனர். கூடுகையில் கலந்துகொண்ட பெண்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்காகவும், இப்பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
October 2025
கிழக்குமண்டலம்
அக்டோபர் : 01 சிவடா பணித்தளத்தில் ஆகஸ்ட் 31 அன்று ஞாயிறு ஆராதனையின்போது, சமூக விரோதிகள் சிலர் ஆலயத்தினுள் புகுந்து, ஆராதனையைத் தடுத்து, போதகரையும் மற்றும் ஆராதிக்கக் கூடிவந்திருந்த விசுவாசிகளையும் மிரட்டிச் சென்றனர்; என்றபோதிலும், கர்த்தருடைய கிருபையினால், இப்பணித்தளத்தில் ஆராதனை தடையின்றி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. இப்பணித்தளத்தில் ஊழியம் செய்துவரும் ஊழியருக்காகவும் மற்றும் பணித்தள விசுவாசிகள் விசுவாசத்தில் ஸ்திரப்படவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 02 காக்கோ பணித்தளத்தில் செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 130 பேர் கலந்துகொண்டனர். விசுவாசிகள் வசனத்திலும் மற்றும் விசுவாசத்திலும் வேரூன்ற இக்கூடுகை உதவியது. இக்கூட்டத்தில், சகோ. ஜெகன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். இப்பணித்தளத்தில், போதகர் இல்லம் மற்றும் பணித்தள ஆலயச் சுற்றுச் சுவர் விரைவில் கட்டப்படவும், விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறவும், பணித்தள ஆலய முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 03 எங்கர்சராய் பணித்தளத்தில் செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூட்டத்தில் 120 பேர் பங்கேற்றனர்; சகோதரர் அவதேஷ் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் மற்றும் ஆத்தும ஆதாயப் பணியில் அவர்களை உற்சாகப்படுத்தவும் இக்கூடுகை வழிவகுத்தது. இப்பணித்தளத்தில் நடைபெறும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், இங்கு நடைபெறும் சபை ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் மற்றும் அமைந்துள்ள நாலந்தா மாவட்டத்தில் கர்த்தர் கிரியைசெய்யவும், ஜனங்கள் உயிர்மீட்சியடையவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 04 ஹல்திகோச்சா பணித்தளத்தில் செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகையில், சபை மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு சொந்த கிராம மக்களுக்காகவும் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் தீய வழிகளிலிருந்து விடுபடவும் பாரத்துடன் ஜெபித்தனர். இக்கூடுகையில், சகோ. பால் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.
அக்டோபர் : 05 பாலுமாத் பணித்தளத்தில் செப்டம்ர் 18 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கானக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில், ‘தரிசனம் தேவை’ என்ற தலைப்பின் கீழ் சகோ. பால் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற விசுவாசிகள், ஆவிக்குரிய ஜீவியத்தில் பெலப்படவும், சமுதாயத்தில் சாட்சியாக வாழவும், தங்கள் வாழ்க்கையைக் குறித்தும் மற்றும் திருச்சபையைக் குறித்தும் தரிசனத்தோடு செயல்படவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 06 நயபஜார் பணித்தளத்தில் செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான எழுப்புதல் கூட்டத்தில் 40 பேர் பங்கேற்றனர். சகோ. ரமாசங்கர் ‘தெபோரா’ மற்றும் ‘பவுல்’ ஆகியோரை மையமாகக் கொண்டு கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். இப்பணித்தளத்தில் ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் நீங்கவும், விரைவில் ஆலயம் கட்டப்படவும் ஜெபிப்போம்.





