July 2026

 



ஜூலை 01 PEACE - 1 கோட்டத்தில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட காசி டான்ட் பணித்தளத்தில் மூன்று நாட்கள் விடுதலை முகாம் நடைபெற்றது;  சகோ. உமேஷ் மற்றும் சகோ. சௌத்ரி ஆகியோர் கலந்துகொண்டு தேவசெய்தியளித்து ஜனங்களுக்காக ஜெபித்தனர். பங்கேற்ற ஜனங்கள் சுகமாக்கும் தேவனுடைய வல்லமையையும் விடுதலையையும் அனுபவித்தனர். கடைசி நாள் கூட்டத்தில், 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆசீர்வாதமடைந்தனர். இப்பணித்தளத்தில் வரும் நாட்களில் நடைபெறும் ஊழியங்களுக்காக ஜெபிப்போம். 

ஜூலை 02 விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்கள் மூலம் 12000 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கும் பணி பணித்தளங்களில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. மே மற்றும் ஜுன் மாதங்களில் சுமார் 7000-க்கும் அதிகமான சிறுவர் சிறுமியரைச் சந்தித்து கிறிஸ்துவின்அன்பில் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களைச் சுற்றியுள்ள சிறுவர் சிறுமியர் விடுமுறை வேதாகமப் பள்ளியில் பங்கேற்று கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், அவர்களது குடும்பங்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஜூலை 03 குராரு பணித்தளத்தில் ஜுன் 17 அன்று நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை முகாமில், பணித்தள மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க கர்த்தர் உதவிசெய்தார். சகோதரி லவ்லி மற்றும் சகோ. சுபம் ஆகியோர் இம்முகாமினை சிறப்பாக நடத்தினர். மருத்துவ வசதிகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் கிராமங்களுக்காகவும், இத்தகைய முகாம்கள் மூலமாக சரீர சுகத்துடன் ஆத்தும சுகத்தையும் பெற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம். 

ஜூலை 04 அருவல் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் 55 சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். சகோ. வெண்ணிலவன் மற்றும் குழுவினர் இக்கூட்டங்களில் பங்கேற்று, 'வாலிபனே எழுந்திரு" என்ற தலைப்பின் கீழ் பாடல்கள் மற்றும் செய்திகளுடன், வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற ஆலோசனைகளும் வழங்கினர். பணித்தள வாலிபர்கள் சந்திக்கப்படவும், அவர்களது கல்வி மற்றும் எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம். 

ஜூலை 05 நைபஜார் பணித்தளத்தில் ஆராதனையின் இடையே வீட்டின் உரிமையாளர் ஆலயக் கதவினை மூடினதினால் ஆராதனை தடைபட்டது; இப்பணித்தளத்தில், ஜனங்கள் விடுதலையோடு கர்த்தரை ஆராதிக்க ஏற்ற இடம் கிடைக்கவும் மற்றும்  பக்கிரி வர்மா பணித்தளத்தில் ஞாயிறு ஆராதனைக்கு இடையூறு செய்யும் சமூக விரோதிகள் மனம் மாறவும், மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் குர்தா பணித்தள ஊழியரின் மனைவி சகோதரி சங்கீதா விரைவில் குணமடையவும் ஜெபிப்போம். 

June 2026

 




ஜூன் 01 PEACE 1 கோட்டத்தின் ஹால்டிகோச்சா, கன்ரா மற்றும் லதேஹார் பணித்தளங்களில் நடைபெற்றச் சுத்திகரிப்புக் கூட்டத்தில் 160-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் பங்கேற்றனர். பரிசுத்த வாழ்க்கையின் முக்கியத்துவத்தைக் குறித்தும், சீர்கெட்ட இந்த உலகில் ஒவ்வொரு விசுவாசியினிடத்திலும் காணப்படவேண்டிய பரிசுத்தத்தின் அவசியத்தைக் குறித்தும் சகோதரர் பால் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விசுவாசிகளுக்காக ஜெபிப்போம். 

ஜூன் 02 மே 2 மற்றும் 9 ஆகிய தினங்கள், சந்த்வா மற்றும் பன்சாரி பணித்தளங்களில் பெண்கள் கூடுகை நடைபெற்றது. “தெபோராவை எழுப்புங்கள்” என்ற தலைப்பின்கீழ் சகோதரி கிருபா பால் மற்றும் சகோதரி ஜாஸ்மின் ஜெயசீலன் ஆகியோர் தேவசெய்தியைப் பகிர்ந்துகொண்டனர். இக்கூட்டத்தில், 140-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்துகொண்டனர். இவர்கள் வரும் நாட்களில் தங்கள் குடும்பத்திலும் மற்றும் சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக இருக்கும்படியும், எல்லா சபைகளிலும் முறையான இடைவெளியில் பெண்கள் கூட்டங்களை நடத்தக்கூடிய கிருபை  கிடைக்கும்படியும் தயவுசெய்து ஜெபிப்போம்.

ஜூன் 03 பணித்தளங்களில் 12,000-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியருக்கு வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியத்திற்காகவும், பல்வேறு பணித்தளங்களில் தற்போது நடைபெற்றுவரும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும், சிறுவர் துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பயணங்கள் மற்றும் உடல்நலத்திற்காகவும், மேலும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் இரட்சிப்பிற்காகவும்  ஜெபிப்போம்.

ஜூன் 04 "இடைவிடாமல் ஜெபியுங்கள்" என்ற தலைப்பின்கீழ், M-2 கோட்டத்தின் டெகரி பணித்தளத்தில் மே 13 அன்று நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்துகொண்டு தங்கள் சபை, கிராமம் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் இரட்சிப்புக்காக பாரத்துடன் ஜெபித்தனர். சகோதரர் தயானந்த் சிங் ஜெபத்தின் முக்கியத்துவத்தினை செய்தியாகப் பகிர்ந்துகொண்டார். விசுவாசிகள் தங்கள் ஜெப வாழ்க்கையில் வளர ஜெபிப்போம்.

ஜூன் 05 M-2 மண்டலத்தின் அக்பர்பூர், குராரு, மன்பூர் மற்றும் டோபி பணித்தளங்களில் இளைஞர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றனர். “இளமையில் உன் சிருஷ்டிகரை நினை” என்ற தலைப்பின்கீழ் சகோதரர் வெண்ணிலவன் மற்றும் சகோதரர் ஜோஷுவா ஆகியோர் இக்கூட்டங்களை நடத்தினர். பாடல்கள் மற்றும் செய்திகள் மூலம் இளைஞர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். அநேகர் தங்களுடைய வாழ்க்கையை தேவனுக்கும் ஊழியத்திற்கும் அர்ப்பணித்தனர். ராஜௌலி, ராஜ்கிர் மற்றும் பஹாட்பூர் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டுமானங்களுக்காக ஜெபிப்போம்.

May 2026



மே 01  மகய் 2 கோட்டத்தின் மகத் காலனி பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 20 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்; சகோதரி எஸ்தர் பாடல்கள், ஆராதனை மற்றும் ஜெபத்தில் வாலிபரை வழிநடத்தியதைத் தொடர்ந்து, சகோ ஜாஸ்வா கிதியோனின் வாழ்க்கையிலிருந்து வாலிபருக்கேற்ற சத்தியத்தையும் நடைமுறை ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டார். வரும் நாட்களில் பணித்தள ஆலயங்களில் நடைபெறவிருக்கும் வாலிபர் கூடுகைகளுக்காகவும் மற்றும் வாலிபர் மத்தியில் கர்த்தர் அறுவடையைக் கட்டளையிடவும் ஜெபிப்போம். 

மே 02  ஏப்ரல் 18 அன்று சுருக்கி கிராமத்தில் நடைபெற்ற சிறுவர் ஊழியத்தில், பாடல்கள் மற்றும் வேதவசனங்கள் மூலமாக சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவின் அன்பிற்கு நேராக வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். தொடர்ந்து, லோகர்சராய் கிராமத்தின் அரசு பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும், தெளிவான ஆலோசனைகளை மாணவர்களுக்கு எடுத்துக்கூற கர்த்தர் கிருபை செய்தார். சிறுவர் மற்றும் மாணவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாகவும், சமுதாயத்திற்குப் பிரயோஜனமுள்ளவர்களாகவும் வாழ ஜெபிப்போம். 

மே 03  டேட்டார் பணித்தளத்தில் ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 25 விசுவாசிகள் பங்கேற்றனர். விசுவாசிகள் பாரம்பரியப் பழக்கவழக்கங்களிலிருந்து மீட்கப்படவும், வேலைவாய்பிற்காகக் காத்திருப்போருக்கு விரைவில் வேலைவாய்ப்பு கிடைக்கவும், விசுவாசிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

மே 04 மகய்-1 கோட்டத்தில் தையற் பயிற்சியினை நிறைவுசெய்த 14 சகோதரிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சகோ. ஜெயசீலன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். புதிதாகப் பயிற்சியில் சேரவிருக்கும் மாணவியருக்காகவும், அருகிலிருக்கும் கிராம மக்களின் இரட்சிப்பிற்காகவும் மற்றும் இங்கு காணப்படும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம். 

மே 05 ராஜ்கிர் மற்றும் ரஜொலி பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகள் தடையின்றி திட்டமிடப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்படவும், கிரிடி பணித்தளத்தில் விரைவில் ஊழியர் இல்லம் கட்டப்படவும், பகட்புர் பணித்தளத்தில் நடைபெறவிருக்கும் ஊழியர் இல்ல மேற்கூரைப் பணிகளுக்காகவும் மற்றும் பிக்ரம் பணித்தளத்தில் காணப்படும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.

April 2026

 


ஏப்ரல் 1 Peace 1 கோட்டத்தின் ஹல்திகோட்ஜா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் 45 விசுவாசிகள் பங்கேற்றனர். பல ஆண்டுகளாக தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டிருந்த இந்த பணித்தளத்தில், ஊழியங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்தாலும், பணித்தளத்தில் ஊழியத்திற்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவும் மற்றும் விசுவாசிகள் பாரம்பரியப் பழக்கங்களிலிருந்து மீட்கப்படவும் ஜெபிப்போம்.

ஏப்ரல் 2 'லத்திகார் பணித்தளத்தில், சகோ. பிரகாஷ் மின்ச் அவர்களது இல்லத்தில், மார்ச் 6 அன்று சிறப்பு வீட்டுக் கூட்டம் நடைபெற்றது; 50 பேர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், அநேகர் விடுதலை பெற்றனர். இப்பணித்தள விசுவாசிகள் வசனத்திலும் பரிசுத்த ஜீவியத்திலும் நிலைநிற்க ஜெபிப்போம். இந்த பணித்தள ஊழியர் சகோ. உமேஷ்-காகவும் மற்றும் இப்பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படவும் ஜெபிப்போம்.   

ஏப்ரல் 3 'மகய்  1 கோட்டத்தின்  மகதம்புர்  பணித்தளத்தில் மார்ச் 13 அன்று நடைபெற்ற பெண்கள் கூடுகையில் சகோதரி ஜாஸ்மின் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார்; 80-க்கும் மேற்பட்ட பெண்கள்  இக்கூடுகையில் கலந்துகொண்டனர். பெண்கள் குடும்பத்தில் ஆண்டவருக்காக உற்சாகமாய்ச் செயல்படும்போது முழுக் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும் என்ற போதனையுடன், குடும்ப அங்கத்தினரின் இரட்சிப்பிற்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது.  விசுவாசிகள் மூலமாக குடும்பத்திலும், அவர்கள் வசிக்கும் கிராமத்திலும் அதிகமானோர் ஆண்டவரை ஏற்றுகொள்ள ஜெபிப்போம்.  

ஏப்ரல் 4 'குராரு பணித்தளத்தில் மார்ச 12 அன்று நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டத்தில், 110 விசுவாசிகள் கலந்துகொண்டனர். 'தடைகளைத் தகர்போம்" என்ற தலைப்பில் செய்திகள் அளிக்கப்பட்டன. தனிப்பட்ட வாழ்க்கையில் வருகின்ற தடைகளையும் மற்றும் வெளியிலிருந்து வருகின்ற தடைகளையும் மேற்கொள்வது எப்படி? என்ற தலைப்பின் கீழ் சகோ. ஜெயசீலன் மற்றும் சகோ. தயானந்த் சிங் ஆகியோர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். கூட்ட முடிவில் ஜனங்களின் விடுதலைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. விசுவாசிகள் எந்த சூழ்நிலையிலும் ஆண்டவருக்காக சாட்சியாக வாழ ஜெபிப்போம். 

ஏப்ரல் 5 வருங்காலத் தலைமுறைகளான சிறுபிள்ளைகளுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, ஒவ்வொரு சபையிலும் சிறுவர்களுக்கான ஞாயிறு பள்ளி நடத்தப்படவும், அதன்மூலம் சிறுபிள்ளைகள் ஆண்டவரைத் தேடவும், பாடல்கள் மற்றும் வசனத்தை வாசிக்கவும் உற்சாகப்படுத்தப்பட்டனர். அதுபோல, ஒவ்வொரு மாதமும் நடைபெற்றுவரும் இளைஞர்களுக்கான கூட்டங்களில், வேதத்தின்படி ஒழுக்கத்துடனும் மற்றும் பரிசுத்தத்துடனும் வாழ இளைஞர்கள் அறிவுறுத்தப்படுவதோடு, ஆண்டவரோடு தனிபட்ட உறவை ஏற்படுத்தவும், சாட்சியாக ஜீவிக்கவும் வழிநடத்தப்படுகின்றனர். ராஜ்கீர் மற்றும் ராஜொலி பணித்தளங்களில் ஆலயக் கட்டுமானப் பணிக்கான வேலைகள் நடைபெற்றுவருகின்றன; இப்பணிகளில் தடைகள் வராமலிருக்கவும், விக்ரம் பணித்தளத்தில் நிலம் வாங்கப்படவும் ஜெபிப்போம்.

March 2026

 


மார்ச் 1 : 
மகய் 2 கோட்டம், ஹிஸ்வா பணித்ததளத்தில் நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில், சுமார் 40 விசுவாசிகள் கலந்துகொண்டு, தங்கள் சபைக்காகவும், தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். இப்பணித்தளத்தில் 20 ஆண்டுகளாக ஊழியம் நடைபெற்றுவந்தபோதிலும், இன்னமும் ஆலயம் கட்டப்டவில்லை. தற்போது விசுவாசி ஒருவரின் வீட்டு மாட்டுத் தொழுவத்தின் ஒரு பகுதியில் ஞாயிறு ஆராதனை நடைபெற்றுவருகிறது, இப்பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படவும், ஜனங்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்கவும் ஜெபிப்போம். 

மார்ச் 2 : ஹன்டர்கன்ச் பணித்தளத்தில் பிப்ரவரி 1 அன்று நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 80 பேர் பங்கேற்றனர்; 'கனிகொடுத்தல்” என்ற தலைப்பின் கீழ் சகோ. பால் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். விசுவாசிகள் தங்கள் ஜீவியத்தில் ஆவிக்குரிய குணங்களான நல்ல கனிகளை வெளிப்படுத்தவும், அதன் மூலமாக அநேகரை கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தவும் உற்சாகப்படுத்தப்பட்டனர். இப்பணித்தளத்தின் சபை ஊழியர் சன்ஜித்திற்காகவும் மற்றும் விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.

மார்ச் 3 : மகய்   கோட்டம்  மசோடி பணித்தளத்தில் பிபரவரி 7ம் தேதி நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் சகோதரி ஜாஸ்மின் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார்; சகோதரி அர்ச்சுனா கூடிவந்தோரை ஜெபத்தில் வழிநடத்தினார். 80-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் இக்கூடுகையில் கலந்துகொண்டனர். தங்களது குடும்பத்தில் பெண்கள் எவ்வாறு சாட்சியாக இருக்கவேண்டும் என்று போதிக்கப்பட்டதுடன், கூட்ட முடிவில் பங்கேற்றோரின் குடும்ப அங்கத்தினரின் இரட்சிப்பிற்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. சபைகளில் பெரும்பாலும் பெண்கள் அதிகமாக ஆண்டவரை அறிந்துகொள்ளுகின்றபோதிலும், வரும் நாட்களில் குடும்பமாக அவர்கள் ஆண்டவரை ஆராதிக்க ஜெபிப்போம்.  

மார்ச் 4 : கிழக்கு மண்டலத்தின் ஜெகனபாத் மாவட்டத்திலுள்ள மதார்பூர் மற்றும் கயா மாவட்டத்திலுள்ள மான்பூர் பணித்தளங்களில், ஜெபிக்கிற சேனையை உருவாக்குவதற்கான 2 நாள் பயிற்சி முகாம் பிப்ரவரி 3 மற்றும் 7 ஆகிய தினங்கள் நடைபெற்றன; இம்முகாமில் சகோ. ஹென்றி மற்றும்    சகோ. ஜெயக்குமார்  கலந்துகொண்டு விசுவாசிகளும் மற்றும் ஊழியர்களும் ஜெப வாழ்க்கையில் வளர பயிற்சியளித்தனர். ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் விசுவாசிகள் தங்கள் சபைக்காகவும், மாவட்டத்திற்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஊக்கமுடன் ஜெபித்தனர். தொடர்ந்து விசுவாசிகள் தங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப ஜெபத்தில் முன்னேற ஜெபிப்போம்.  

மார்ச் 5 : கோடர்மா பணித்தளத்தின் அசனாபாத் கிராமத்தில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது; சகோதரி. சாரா கிராம மக்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனையையும், சுகாதாரத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அத்துடன், கயா சிட்டி சர்ச்சிலும் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. ராஜ்கிர் மற்றும் ராஜொலி பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெற ஜெபிப்போம்.

Feb 2026

 



பிப்ரவரி 1 கடந்த மாதத்தில் பணித்தளங்களிலும் மற்றும் பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் சுமார் 7000-க்கும் அதிகமான ஜனங்களுக்கு, கைப்பிரதிகள், சுவிசேஷ புத்தகங்கள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலமாக சுவிசேஷம் அறிவிக்கப்பட்டதுடன், ஏழை எளிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு கம்பளி மற்றும் குளிராடைகள் வழங்கப்பட்டன. சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட கிராமங்களில் வரும் நாட்களில் செய்யப்பட்டவிருக்கும் பின்தொடர் ஊழியப் பணிகளுக்காகவும், சுவிசேஷத்தைக் கேட்டோர் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 2 கயா பட்டணத்தின் ஜெம்ஸ் சிட்டி சர்ச் மூலமாக தொழுநோய் மருத்துவமனையின் உள்நோயாளிகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டு, இலவசமாக கம்பளிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியினை, கயா பணித்தள விசுவாசிகள் உற்சாகமாக நிறைவேற்றினர்; கயா பட்டணத்தின் வார்டு கவுன்சிலர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் மருத்துவமனை ஊழியங்கள் மூலமாக நோயாளிகள் சந்திக்கப்படவும் மற்றும் நோயாளிகள் சுகம் பெற்று கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக மாறவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 3 மகய் - 2 கோட்டத்தின் டெக்காரி பணித்தளத்தின் தெதரியா கிராமத்தில் புதிதாக வீட்டு சபை தொடங்கப்பட்டது; இதில், 40 விசுவாசிகள் கலந்துகொண்டு தேவனை ஆராதித்தனர். கிழக்கு மண்டலத்தின் கோட்டங்களுக்கான வருடாந்திர ஊழியத் திட்டமிடுதல் கூடுகைகளை கோட்ட அலுவலகங்களில் நடத்த கர்த்தர் உதவிசெய்தார். திட்டமிடப்பட்ட ஊழியப் பணிகள் வரும்நாட்களில் தடையின்றி செய்யப்படவும், புதிய கிராமங்களில் சுவிசேஷத்திற்கான வாசல்கள் திறக்கவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 4 ஹசாரிபாக் மாவட்டத்தின் குந்துரு பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 25 பேர் கலந்துகொண்டனர்; சகோதரர் சித்தார்த் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். இப்பணித்தள ஊழியர் சகோ. விஷ்ணு தொடர்ந்து சந்தித்துவரும் எதிர்ப்புகள் மாறவும், ஊழியர் தங்கியிருந்த வீட்டினைக் காலிசெய்ய வற்புறுத்தப்பட்ட நிலையில், தங்குவதற்கு வீடு கிடைக்கவும், எதிர்ப்பாளர்களைக் கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 5 கயா மாவட்டத்தின் குராரு பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லம் ஜனவரி 7 அன்று ஜெபத்துடன் அர்ப்பணிக்கப்பட்டது; தொடர்ந்து நடைபெற்ற ஆராதனையில் சகோ. ஜோ பால்சன் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். பணித்தள ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கயா மாவட்டத்தின் பதேபூர் பணித்தளத்தில் ஆலயத்தின் மின்சார உபகரணங்கள் உடைக்கப்பட்டு, ஊழியர் மிரட்டப்பட்டு, ஊழியரின் இல்லத்தையும் காலிசெய்ய வற்புறுத்தியுள்ளனர். இப்பணித்தளத்தில் தொடர்ந்துவரும் எதிர்ப்புகள் மாற ஜெபிப்போம்.    

Jan 2026


                                                       
ஜனவரி -  01 ஜெம்ஸ் ஹிந்தி சபை ஊழியங்கள் (GEMS Hi-Chal) மூலமாக, அக்பர்பூர், அருவல் மற்றும் பன்சாரி ஆகிய பணித்தளங்களில் இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு ஆத்தும ஆதாயப் பயிற்சி முகாம்களில், பணித்தள ஊழியர்கள் உட்பட, ஆத்தும ஆதாயப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் வாஞ்சையுடைய 90 சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். இப்பயிற்சியில் பங்கேற்றோர், கிறிஸ்துவை அறியாத மக்களை சுவிசேஷத்தின் மூலம் கிறிஸ்துவண்டை வழிநடத்தவும், பணித்தளங்களில் இவர்கள் மூலம் செய்யப்படவிருக்கும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  02 டிசம்பர் 1, 2025 அன்று கயா பணித்தளத்தில் நடைபெற்ற கிழக்கு மண்டல ஊழியர் கூடுகையில், பணித்தள சபை ஊழியர்கள் 90 பேர் கலந்துகொண்டனர். இக்கூடுகையில், சகோ. ஜோ பால்சன் பங்கேற்று ‘எழுந்து பிரகாசி’ என்ற தலைப்பின் கீழ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஊழியர்களை ஜெபத்தில் நடத்தினார். பணித்தள ஊழியர்களின் சரீர சுகத்திற்காகவும் மற்றும் ஊழியங்களில் அவர்கள் வல்லமையாகப் பயன்படுத்தப்படவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  03 டிசம்பர் 19, 2025 அன்று, மகய் - 2 கோட்டத்தின் கிரிடி பணித்தளத்திற்கு அருகிலிருக்கும் பெங்காபாத் கிராமத்தில் கிறிஸ்மஸ் விழாவுடன், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம், அக்கிராமத்தில் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கான வாசலை கர்த்தர் திறந்துள்ளார். இக்கிராமத்தில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் ஊழியங்களுக்காக ஜெபிப்போம். 

ஜனவரி -  04 மகய் - 2 கோட்டத்தின் சேர்காட்டி பணித்தளத்தில் ஏழை விதவைகளுக்கு சுவிசேஷம் அறிவித்து, அவர்களுக்காக ஜெபித்து, இலவச ஆடைகளையும் வழங்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் சுவிசேஷ ஊழியங்களுக்காகவும் மற்றும் இங்கு ஊழியத்திற்குக் காணப்படும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  05 மகய் - 1 கோட்டத்தின் சேக்பூரா பணித்தளத்தில், டிசம்பர் 17, 2025 அன்று நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்ச்சியின் மூலமாக, கூடிவந்த பணித்தள மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். தொடர்ந்து, மசௌடி பணித்தளத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்ச்சின் மூலமாகவும் பணித்தள மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர், கிறிஸ்துவின் அன்பினால் தொடப்பட ஜெபிப்போம். 

ஜனவரி -  06 கயா மாவட்டத்தின் டெக்னோபார்ம், பாங்கே பஜார் மற்றும் நவாதா மாவட்டத்திலுள்ள மாக்ரைன் ஆகிய கிராமங்களில் செயல்பட்டுவரும் ஜெம்ஸ் டியூசன் மையங்களில், 2025 டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில், சிறியோர், வாலிபர் மற்றும் பெற்றோருக்கு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியினை அறிவித்து, ஏழை மக்களுக்கு குளிராடைகளையும் வழங்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் டியூசன் மையங்களுக்காகவும், புதிய பணித்தளங்களில் டியூசன் மையங்கள் தொடங்கப்படவும் மற்றும் குளிர் காலத்தில் பணித்தள மக்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.