July 2026

 



ஜூலை 01 PEACE - 1 கோட்டத்தில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட காசி டான்ட் பணித்தளத்தில் மூன்று நாட்கள் விடுதலை முகாம் நடைபெற்றது;  சகோ. உமேஷ் மற்றும் சகோ. சௌத்ரி ஆகியோர் கலந்துகொண்டு தேவசெய்தியளித்து ஜனங்களுக்காக ஜெபித்தனர். பங்கேற்ற ஜனங்கள் சுகமாக்கும் தேவனுடைய வல்லமையையும் விடுதலையையும் அனுபவித்தனர். கடைசி நாள் கூட்டத்தில், 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆசீர்வாதமடைந்தனர். இப்பணித்தளத்தில் வரும் நாட்களில் நடைபெறும் ஊழியங்களுக்காக ஜெபிப்போம். 

ஜூலை 02 விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்கள் மூலம் 12000 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கும் பணி பணித்தளங்களில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. மே மற்றும் ஜுன் மாதங்களில் சுமார் 7000-க்கும் அதிகமான சிறுவர் சிறுமியரைச் சந்தித்து கிறிஸ்துவின்அன்பில் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களைச் சுற்றியுள்ள சிறுவர் சிறுமியர் விடுமுறை வேதாகமப் பள்ளியில் பங்கேற்று கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், அவர்களது குடும்பங்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஜூலை 03 குராரு பணித்தளத்தில் ஜுன் 17 அன்று நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை முகாமில், பணித்தள மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க கர்த்தர் உதவிசெய்தார். சகோதரி லவ்லி மற்றும் சகோ. சுபம் ஆகியோர் இம்முகாமினை சிறப்பாக நடத்தினர். மருத்துவ வசதிகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் கிராமங்களுக்காகவும், இத்தகைய முகாம்கள் மூலமாக சரீர சுகத்துடன் ஆத்தும சுகத்தையும் பெற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம். 

ஜூலை 04 அருவல் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் 55 சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். சகோ. வெண்ணிலவன் மற்றும் குழுவினர் இக்கூட்டங்களில் பங்கேற்று, 'வாலிபனே எழுந்திரு" என்ற தலைப்பின் கீழ் பாடல்கள் மற்றும் செய்திகளுடன், வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற ஆலோசனைகளும் வழங்கினர். பணித்தள வாலிபர்கள் சந்திக்கப்படவும், அவர்களது கல்வி மற்றும் எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம். 

ஜூலை 05 நைபஜார் பணித்தளத்தில் ஆராதனையின் இடையே வீட்டின் உரிமையாளர் ஆலயக் கதவினை மூடினதினால் ஆராதனை தடைபட்டது; இப்பணித்தளத்தில், ஜனங்கள் விடுதலையோடு கர்த்தரை ஆராதிக்க ஏற்ற இடம் கிடைக்கவும் மற்றும்  பக்கிரி வர்மா பணித்தளத்தில் ஞாயிறு ஆராதனைக்கு இடையூறு செய்யும் சமூக விரோதிகள் மனம் மாறவும், மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் குர்தா பணித்தள ஊழியரின் மனைவி சகோதரி சங்கீதா விரைவில் குணமடையவும் ஜெபிப்போம்.