June 2026

 




ஜூன் 01 PEACE 1 கோட்டத்தின் ஹால்டிகோச்சா, கன்ரா மற்றும் லதேஹார் பணித்தளங்களில் நடைபெற்றச் சுத்திகரிப்புக் கூட்டத்தில் 160-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் பங்கேற்றனர். பரிசுத்த வாழ்க்கையின் முக்கியத்துவத்தைக் குறித்தும், சீர்கெட்ட இந்த உலகில் ஒவ்வொரு விசுவாசியினிடத்திலும் காணப்படவேண்டிய பரிசுத்தத்தின் அவசியத்தைக் குறித்தும் சகோதரர் பால் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விசுவாசிகளுக்காக ஜெபிப்போம். 

ஜூன் 02 மே 2 மற்றும் 9 ஆகிய தினங்கள், சந்த்வா மற்றும் பன்சாரி பணித்தளங்களில் பெண்கள் கூடுகை நடைபெற்றது. “தெபோராவை எழுப்புங்கள்” என்ற தலைப்பின்கீழ் சகோதரி கிருபா பால் மற்றும் சகோதரி ஜாஸ்மின் ஜெயசீலன் ஆகியோர் தேவசெய்தியைப் பகிர்ந்துகொண்டனர். இக்கூட்டத்தில், 140-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்துகொண்டனர். இவர்கள் வரும் நாட்களில் தங்கள் குடும்பத்திலும் மற்றும் சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக இருக்கும்படியும், எல்லா சபைகளிலும் முறையான இடைவெளியில் பெண்கள் கூட்டங்களை நடத்தக்கூடிய கிருபை  கிடைக்கும்படியும் தயவுசெய்து ஜெபிப்போம்.

ஜூன் 03 பணித்தளங்களில் 12,000-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியருக்கு வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியத்திற்காகவும், பல்வேறு பணித்தளங்களில் தற்போது நடைபெற்றுவரும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும், சிறுவர் துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பயணங்கள் மற்றும் உடல்நலத்திற்காகவும், மேலும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் இரட்சிப்பிற்காகவும்  ஜெபிப்போம்.

ஜூன் 04 "இடைவிடாமல் ஜெபியுங்கள்" என்ற தலைப்பின்கீழ், M-2 கோட்டத்தின் டெகரி பணித்தளத்தில் மே 13 அன்று நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்துகொண்டு தங்கள் சபை, கிராமம் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் இரட்சிப்புக்காக பாரத்துடன் ஜெபித்தனர். சகோதரர் தயானந்த் சிங் ஜெபத்தின் முக்கியத்துவத்தினை செய்தியாகப் பகிர்ந்துகொண்டார். விசுவாசிகள் தங்கள் ஜெப வாழ்க்கையில் வளர ஜெபிப்போம்.

ஜூன் 05 M-2 மண்டலத்தின் அக்பர்பூர், குராரு, மன்பூர் மற்றும் டோபி பணித்தளங்களில் இளைஞர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றனர். “இளமையில் உன் சிருஷ்டிகரை நினை” என்ற தலைப்பின்கீழ் சகோதரர் வெண்ணிலவன் மற்றும் சகோதரர் ஜோஷுவா ஆகியோர் இக்கூட்டங்களை நடத்தினர். பாடல்கள் மற்றும் செய்திகள் மூலம் இளைஞர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். அநேகர் தங்களுடைய வாழ்க்கையை தேவனுக்கும் ஊழியத்திற்கும் அர்ப்பணித்தனர். ராஜௌலி, ராஜ்கிர் மற்றும் பஹாட்பூர் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டுமானங்களுக்காக ஜெபிப்போம்.