அக்டோபர் 1 செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தினங்கள், சிக்காரியாவில் நடைபெற்ற கிழக்கு மண்டல ஊழியர் கூடுகையில் 70-க்கும் மேற்பட்ட ஊழியர் இதில் பங்கேற்றனர். 'மரணம் வரைக்கும் உண்மையுள்ளவனாயிரு" என்ற தலைப்பின்கீழ் சகோ. ஆஷிஷ், சகோ. சுரேஷ் மற்றும் சகோ. ஜெயசீலன் ஆகியோர் தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஊழியர்களை உற்சாகப்படுத்தினர். புதுப்பிக்கப்பட்ட தரிசனம், பலப்படுத்தப்பட்ட விசுவாசம் மற்றும் புதிய அர்ப்பணிப்புடன் ஊழியங்கள் தொடரவும், கனிகள் பெருகவும் ஜெபிப்போம்.
அக்டோபர் 2 அர்வல் பணித்தளத்தில் செப்டம்பர் 16 அன்று 'சபையே விழித்தெழு" என்ற கருப்பொருளின்கீழ் நடைபெற்ற கூடுகையில் சகோ. ராகேஷ் குமார் தேவ வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்; 180 விசுவாசிகள் பங்கேற்றனர். இவர்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவும், உறுதியாயிருந்து கிறிஸ்துவுக்கு உண்மையான சாட்சிகளாக வாழவும் ஜெபிப்போம்.
அக்டோபர் 3 டேகாரி பணித்தளத்தில் செப்டம்பர் 16 அன்று நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 24 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 75 பேர் பங்கேற்றனர்; சகோ. சுரேந்தர் மற்றும் சகோதரி அம்ரிதா ஆகியோர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட குடும்பங்கள் கிறிஸ்துவில் தொடர்ந்து வளரவும், சமுதாயத்தில் சாட்சிகளாக வாழவும் ஜெபிப்போம்.
அக்டோபர் 4 மக்தம்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற ஆவிக்குரிய எழுச்சிக் கூட்டத்தினை கர்த்தர் ஆசீர்வதித்தார். சகோ. ஜெயசீலன் மற்றும் சகோதரி ஜாய் ஜெயசீலன் ஆகியோர் இக்கூட்டங்களில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். 150-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் இக்கூட்டத்தில் பங்குபெற்றனர். இப்பணித்தளத்தில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் மற்றும் விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கைக்காகவும் ஜெபிப்போம்.
அக்டோபர் 5 புத்தகயா பணித்தள சபை மற்றும் கயா லோகா ஆரம்பப் பள்ளிகளில் நடத்தப்பட்ட மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலமாக,ஜனங்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் மற்றும் விழிப்புணர்வினையும் வழங்க கர்த்தர் உதவிசெய்தார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்யவும், சுவிசேஷம் அறிவிக்கப்படவும் ஜெபிப்போம்.
அக்டோபர் 6 செப்டம்பர் 17 அன்று மகத் காலனி சபையில் நடைபெற்ற வேதாகம வகுப்பினை கர்த்தர் ஆசீர்வதித்தார். தொடர்ந்து, செப்டம்பர் 24 முதல் 28 வரை பன்சாரி பணித்தளத்தில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களில் 140 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். ராஜ்கீர் மற்றும் லத்திஹார் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சபை கட்டுமானப் பணிகளுக்காக ஜெபிப்போம்.
