கிழக்குமண்டலம்
ஆகஸ்ட் 02 மகாய் 2 கோட்டத்தின் கயா பணித்தளத்தில், ஜூலை 5 அன்று நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 140 வாலிப சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். சென்னையைச் சேர்ந்த சகோ. ஜான் இருதயராஜ் மற்றும்
சகோ. தயானந்தன் ஆகியோர் தேவ செய்தியளித்து, வாலிபர்களின் வாழ்க்கைக்கு ஏற்ற ஆலோசனைகளையும் வழங்கி அவர்களுக்காக ஜெபித்தனர். சகோ. ஜோஷ்வா நடத்திய பாடல், ஆராதனை, விளையாட்டு மற்றும் வேத வினாப் போட்டிகள் வாலிபரை ஆண்டவருக்குள் வேரூன்ற உதவின. அவ்வாறே, மகாய்-1 கோட்டத்தின் பேலா பணித்தளத்தில் ஜூலை 17 அன்று நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில், 37 வாலிபர் கல்ந்துகொண்டனர். யோசேப்பைப் போல எப்படி பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்ற கருப்பொருளின் கீழ், சகோ. ஜெகன் மற்றும் சகோ. தம்பிதுரை ஆகியோர் வழங்கிய செய்திக்கு, ஜெப வேளையின் போது வாலிபர் தங்களை அர்ப்பணித்தனர். வரும் நாட்களில் ஒவ்வொரு திருச்சபையிலும் வாலிபர் கூடுகைகள் நடைபெறவும் மற்றும் வாலிபர் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 03 "சந்தோஷமாயிருங்கள்" என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றுவரும் பணித்தளச் சிறுவர் ஊழியத்தின் வாயிலாக, 14,000 அதிகமான சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை எடுத்துச் சொல்லவும், கிறிஸ்துவுக்குள் அவர்களை வழிநடத்தவும் கர்த்தர் உதவி செய்தார்; தேவனுக்கே மகிமை! கடந்த மாதத்தில் ஜெம்ஸ் பள்ளிகளிலும் மற்றும் பிற பள்ளிகளிலும் எவ்விதத் தடையுமின்றி சிறுவர் ஊழியத்தினை நிறைவேற்ற கர்த்தர் கொடுத்த வாய்ப்புக்காகக் கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறோம். ஊழியர்களின் பயண பாதுகாபிற்காகவும், நல்ல காலச் சூழ்நிலைகளுக்காகவும், எந்தெந்த கிராமங்களில் சிறுவர் ஊழியங்கள் நடைபெற்றதோ, அந்தந்தக் கிராமங்களில் ஆராதனை கூடுகை நடைபெறவும் ஜெபிப்போம் .
ஆகஸ்ட் 04 சன்துவா பணித்தளத்தில் ஜூலை 18 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான உபவாசக்கூட்டத்தில் 50 பேர் கலந்துகொண்டனர். "பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தகூடாது" என்ற தலைப்பின் கீழ் சகோ. பிலிப் திருக்கி அளித்த செய்திக்கு விசுவாசிகள் தங்களை ஒப்புக் கொடுத்ததுடன், பணித்தள மக்களுக்காகவும், ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் இணைந்து ஜெபித்தனர்.
ஆகஸ்ட் 05 ஹில்சா பணித்தளத்தில் ஜூலை 18 அன்று எழுப்புதல் கூட்டம் நடைபெற்றது; 55 பேர் கலந்துகொண்டு வசனத்தைக் கேட்டனர். சகோ.ஜெகன் மற்றும் சகோ. ராகேஷ் ரவி ஆகியோர் தேவசெய்தியளித்தனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஆண்டவருக்காகத் தீவிரமாய்ச் செயல்பட ஜெபித்துகொள்ளுங்கள். ராஜ்கீர் மற்றும் ராஜொலி பணித்தளங்களில் ஆலயக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவும், குராரு பணித்தளத்தில் ஊழியர் இல்லம் விரைவில் தடையின்றி கட்டிமுடிக்கப்படவும் ஜெபிப்போம்.