October 2025

                                                    கிழக்குமண்டலம்


அக்டோபர் : 01 சிவடா பணித்தளத்தில் ஆகஸ்ட் 31 அன்று ஞாயிறு ஆராதனையின்போது, சமூக விரோதிகள் சிலர் ஆலயத்தினுள் புகுந்து, ஆராதனையைத் தடுத்து, போதகரையும் மற்றும் ஆராதிக்கக் கூடிவந்திருந்த விசுவாசிகளையும் மிரட்டிச் சென்றனர்; என்றபோதிலும், கர்த்தருடைய கிருபையினால், இப்பணித்தளத்தில் ஆராதனை தடையின்றி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. இப்பணித்தளத்தில் ஊழியம் செய்துவரும் ஊழியருக்காகவும் மற்றும் பணித்தள விசுவாசிகள் விசுவாசத்தில் ஸ்திரப்படவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 02 காக்கோ பணித்தளத்தில் செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 130 பேர் கலந்துகொண்டனர். விசுவாசிகள் வசனத்திலும் மற்றும் விசுவாசத்திலும் வேரூன்ற இக்கூடுகை உதவியது. இக்கூட்டத்தில், சகோ. ஜெகன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். இப்பணித்தளத்தில், போதகர் இல்லம் மற்றும் பணித்தள ஆலயச் சுற்றுச் சுவர் விரைவில் கட்டப்படவும், விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறவும், பணித்தள ஆலய முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.  

அக்டோபர் : 03  எங்கர்சராய் பணித்தளத்தில் செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூட்டத்தில் 120 பேர் பங்கேற்றனர்; சகோதரர் அவதேஷ் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் மற்றும் ஆத்தும ஆதாயப் பணியில் அவர்களை உற்சாகப்படுத்தவும் இக்கூடுகை வழிவகுத்தது. இப்பணித்தளத்தில் நடைபெறும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், இங்கு நடைபெறும் சபை ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் மற்றும் அமைந்துள்ள நாலந்தா மாவட்டத்தில் கர்த்தர் கிரியைசெய்யவும், ஜனங்கள் உயிர்மீட்சியடையவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 04 ஹல்திகோச்சா பணித்தளத்தில் செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகையில், சபை மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு சொந்த கிராம மக்களுக்காகவும் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் தீய வழிகளிலிருந்து விடுபடவும் பாரத்துடன் ஜெபித்தனர். இக்கூடுகையில், சகோ. பால் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.   

அக்டோபர் : 05  பாலுமாத் பணித்தளத்தில் செப்டம்ர் 18 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கானக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில், ‘தரிசனம் தேவை’ என்ற தலைப்பின் கீழ் சகோ. பால் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற விசுவாசிகள், ஆவிக்குரிய ஜீவியத்தில் பெலப்படவும், சமுதாயத்தில் சாட்சியாக வாழவும், தங்கள் வாழ்க்கையைக் குறித்தும் மற்றும் திருச்சபையைக் குறித்தும் தரிசனத்தோடு செயல்படவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 06 நயபஜார் பணித்தளத்தில் செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான எழுப்புதல் கூட்டத்தில் 40 பேர் பங்கேற்றனர். சகோ. ரமாசங்கர் ‘தெபோரா’ மற்றும் ‘பவுல்’ ஆகியோரை மையமாகக் கொண்டு கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். இப்பணித்தளத்தில் ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் நீங்கவும், விரைவில் ஆலயம் கட்டப்படவும் ஜெபிப்போம்.