கிழக்குமண்டலம்
நவம்பர் 1 டெக்காரி மற்றும் மான்பூர் ஆகிய பணித்தளங்களில், 'ஆயத்தமாயிருங்கள்" என்ற கருப்பொருளின் கீழ், ஜெம்ஸ் பெண்கள் ஊழியங்களின் (GEMS WET) மூலமாக நடத்தப்பட்ட பெண்கள் கூடுகையில் 162 சகோதரிகள் கலந்துகொண்டனர். பாடல் மற்றும் ஆராதனை வேளைகளைத் தொடர்ந்து, பல்வேறு ஜெபக்குறிப்புகளுக்காக ஜெபிக்கவும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளவும் ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்ளவும் அத்துடன் தேவ செய்தியைக் கேட்கவும் இக்கூடுகையின்போது சகோதரிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. இக்கூடுகையினைத் தொடர்ந்து, ஒவ்வொரு பணித்தள சபையிலும், இரண்டு சகோதரிகள் பணித்தள பெண்கள் ஊழியங்களைத் தொடர அர்ப்பணிக்கப்பட்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் பெண்கள் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஜெம்ஸ் பெண்கள் ஊழியக் குழுவினருக்காகவும் ஜெபிப்போம்.
நவம்பர் 3 ஷேக்பூரா, காக்கோ, மக்தம்பூர் ஆகிய பணித்தளங்களில் 'வாழ்க்கையின் நோக்கம்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 246 பேர் கலந்துகொண்டனர்; சகோ. வென்னிலவன் மற்றும் குழுவினர் தேவ செய்தியுடன் பாடல்கள், ஆலோசனைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக வாலிபரை கிறிஸ்துவண்டை நடத்தினர். காக்கோ பணித்தளத்தில் 18 வாலிபர்கள் ஊழியத்திற்கென்று தங்களை அர்ப்பணித்தனர். தொடர்ந்து, கூடு, சந்துவா, மன்டர் பணித்தளங்களில் அக்டோபர் 16 முதல் 18 வரை நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 306 வாலிபர் பங்கேற்றனர். 'பிதாவினிடத்திற்குத் திரும்புங்கள்" என்ற கருப்பொருள் அடங்கியச் செய்தியினைத் தொடர்ந்து வாலிபர்களுக்கேற்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இக்கூடுகையின்போது, 12 வாலிபர் ஊழியத்திற்கென்று தங்களை அர்ப்பணித்தனர். அர்ப்பணித்த வாலிபர்கள் அர்ப்பணிப்பில் நிலைத்து நிற்கவும், விசுவாசத்தில் வளரவும் ஜெபிப்போம்.
நவம்பர் 4 அன்டர்கன்ஜ் பணித்தளத்தில் அக்டோபர் 19 அன்று நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 75 பேர் கலந்துகொண்டனர். 'சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள்" என்ற தலைப்பில் சகோ. பால் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். இக்கூட்டங்களில் பங்கேற்றோர் வேத வசனத்தின்படி வாழவும், அப்பணித்தளத்தின் எழுப்புதலுக்குக் காரணமாகவும் ஜெபிப்போம்.
நவம்பர் 5 தெத்தர்டாட் பணித்தளத்தில் அக்டோபர் 10 அன்று நடைபெற்ற பெண்கள் கூடுகையில் ' புத்தியுள்ள ஸ்திரீ " என்ற தலைப்பின் கீழ் சகோ. சுஸ்மா சொயம்பர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார்; இக்கூடுகையில் 49 பேர் கலந்துகொண்டனர். கூடுகையில் கலந்துகொண்ட பெண்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்காகவும், இப்பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
