ஜனவரி - 01 ஜெம்ஸ் ஹிந்தி சபை ஊழியங்கள் (GEMS Hi-Chal) மூலமாக, அக்பர்பூர், அருவல் மற்றும் பன்சாரி ஆகிய பணித்தளங்களில் இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு ஆத்தும ஆதாயப் பயிற்சி முகாம்களில், பணித்தள ஊழியர்கள் உட்பட, ஆத்தும ஆதாயப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் வாஞ்சையுடைய 90 சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். இப்பயிற்சியில் பங்கேற்றோர், கிறிஸ்துவை அறியாத மக்களை சுவிசேஷத்தின் மூலம் கிறிஸ்துவண்டை வழிநடத்தவும், பணித்தளங்களில் இவர்கள் மூலம் செய்யப்படவிருக்கும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
ஜனவரி - 02 டிசம்பர் 1, 2025 அன்று கயா பணித்தளத்தில் நடைபெற்ற கிழக்கு மண்டல ஊழியர் கூடுகையில், பணித்தள சபை ஊழியர்கள் 90 பேர் கலந்துகொண்டனர். இக்கூடுகையில், சகோ. ஜோ பால்சன் பங்கேற்று ‘எழுந்து பிரகாசி’ என்ற தலைப்பின் கீழ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஊழியர்களை ஜெபத்தில் நடத்தினார். பணித்தள ஊழியர்களின் சரீர சுகத்திற்காகவும் மற்றும் ஊழியங்களில் அவர்கள் வல்லமையாகப் பயன்படுத்தப்படவும் ஜெபிப்போம்.
ஜனவரி - 03 டிசம்பர் 19, 2025 அன்று, மகய் - 2 கோட்டத்தின் கிரிடி பணித்தளத்திற்கு அருகிலிருக்கும் பெங்காபாத் கிராமத்தில் கிறிஸ்மஸ் விழாவுடன், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம், அக்கிராமத்தில் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கான வாசலை கர்த்தர் திறந்துள்ளார். இக்கிராமத்தில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
ஜனவரி - 04 மகய் - 2 கோட்டத்தின் சேர்காட்டி பணித்தளத்தில் ஏழை விதவைகளுக்கு சுவிசேஷம் அறிவித்து, அவர்களுக்காக ஜெபித்து, இலவச ஆடைகளையும் வழங்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் சுவிசேஷ ஊழியங்களுக்காகவும் மற்றும் இங்கு ஊழியத்திற்குக் காணப்படும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.
ஜனவரி - 05 மகய் - 1 கோட்டத்தின் சேக்பூரா பணித்தளத்தில், டிசம்பர் 17, 2025 அன்று நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்ச்சியின் மூலமாக, கூடிவந்த பணித்தள மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். தொடர்ந்து, மசௌடி பணித்தளத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்ச்சின் மூலமாகவும் பணித்தள மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர், கிறிஸ்துவின் அன்பினால் தொடப்பட ஜெபிப்போம்.
ஜனவரி - 06 கயா மாவட்டத்தின் டெக்னோபார்ம், பாங்கே பஜார் மற்றும் நவாதா மாவட்டத்திலுள்ள மாக்ரைன் ஆகிய கிராமங்களில் செயல்பட்டுவரும் ஜெம்ஸ் டியூசன் மையங்களில், 2025 டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில், சிறியோர், வாலிபர் மற்றும் பெற்றோருக்கு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியினை அறிவித்து, ஏழை மக்களுக்கு குளிராடைகளையும் வழங்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் டியூசன் மையங்களுக்காகவும், புதிய பணித்தளங்களில் டியூசன் மையங்கள் தொடங்கப்படவும் மற்றும் குளிர் காலத்தில் பணித்தள மக்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.
