Feb 2026

 



பிப்ரவரி 1 கடந்த மாதத்தில் பணித்தளங்களிலும் மற்றும் பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் சுமார் 7000-க்கும் அதிகமான ஜனங்களுக்கு, கைப்பிரதிகள், சுவிசேஷ புத்தகங்கள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலமாக சுவிசேஷம் அறிவிக்கப்பட்டதுடன், ஏழை எளிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு கம்பளி மற்றும் குளிராடைகள் வழங்கப்பட்டன. சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட கிராமங்களில் வரும் நாட்களில் செய்யப்பட்டவிருக்கும் பின்தொடர் ஊழியப் பணிகளுக்காகவும், சுவிசேஷத்தைக் கேட்டோர் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 2 கயா பட்டணத்தின் ஜெம்ஸ் சிட்டி சர்ச் மூலமாக தொழுநோய் மருத்துவமனையின் உள்நோயாளிகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டு, இலவசமாக கம்பளிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியினை, கயா பணித்தள விசுவாசிகள் உற்சாகமாக நிறைவேற்றினர்; கயா பட்டணத்தின் வார்டு கவுன்சிலர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் மருத்துவமனை ஊழியங்கள் மூலமாக நோயாளிகள் சந்திக்கப்படவும் மற்றும் நோயாளிகள் சுகம் பெற்று கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக மாறவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 3 மகய் - 2 கோட்டத்தின் டெக்காரி பணித்தளத்தின் தெதரியா கிராமத்தில் புதிதாக வீட்டு சபை தொடங்கப்பட்டது; இதில், 40 விசுவாசிகள் கலந்துகொண்டு தேவனை ஆராதித்தனர். கிழக்கு மண்டலத்தின் கோட்டங்களுக்கான வருடாந்திர ஊழியத் திட்டமிடுதல் கூடுகைகளை கோட்ட அலுவலகங்களில் நடத்த கர்த்தர் உதவிசெய்தார். திட்டமிடப்பட்ட ஊழியப் பணிகள் வரும்நாட்களில் தடையின்றி செய்யப்படவும், புதிய கிராமங்களில் சுவிசேஷத்திற்கான வாசல்கள் திறக்கவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 4 ஹசாரிபாக் மாவட்டத்தின் குந்துரு பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 25 பேர் கலந்துகொண்டனர்; சகோதரர் சித்தார்த் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். இப்பணித்தள ஊழியர் சகோ. விஷ்ணு தொடர்ந்து சந்தித்துவரும் எதிர்ப்புகள் மாறவும், ஊழியர் தங்கியிருந்த வீட்டினைக் காலிசெய்ய வற்புறுத்தப்பட்ட நிலையில், தங்குவதற்கு வீடு கிடைக்கவும், எதிர்ப்பாளர்களைக் கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 5 கயா மாவட்டத்தின் குராரு பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லம் ஜனவரி 7 அன்று ஜெபத்துடன் அர்ப்பணிக்கப்பட்டது; தொடர்ந்து நடைபெற்ற ஆராதனையில் சகோ. ஜோ பால்சன் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். பணித்தள ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கயா மாவட்டத்தின் பதேபூர் பணித்தளத்தில் ஆலயத்தின் மின்சார உபகரணங்கள் உடைக்கப்பட்டு, ஊழியர் மிரட்டப்பட்டு, ஊழியரின் இல்லத்தையும் காலிசெய்ய வற்புறுத்தியுள்ளனர். இப்பணித்தளத்தில் தொடர்ந்துவரும் எதிர்ப்புகள் மாற ஜெபிப்போம்.