March 2026

 


மார்ச் 1 : 
மகய் 2 கோட்டம், ஹிஸ்வா பணித்ததளத்தில் நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில், சுமார் 40 விசுவாசிகள் கலந்துகொண்டு, தங்கள் சபைக்காகவும், தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். இப்பணித்தளத்தில் 20 ஆண்டுகளாக ஊழியம் நடைபெற்றுவந்தபோதிலும், இன்னமும் ஆலயம் கட்டப்டவில்லை. தற்போது விசுவாசி ஒருவரின் வீட்டு மாட்டுத் தொழுவத்தின் ஒரு பகுதியில் ஞாயிறு ஆராதனை நடைபெற்றுவருகிறது, இப்பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படவும், ஜனங்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்கவும் ஜெபிப்போம். 

மார்ச் 2 : ஹன்டர்கன்ச் பணித்தளத்தில் பிப்ரவரி 1 அன்று நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 80 பேர் பங்கேற்றனர்; 'கனிகொடுத்தல்” என்ற தலைப்பின் கீழ் சகோ. பால் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். விசுவாசிகள் தங்கள் ஜீவியத்தில் ஆவிக்குரிய குணங்களான நல்ல கனிகளை வெளிப்படுத்தவும், அதன் மூலமாக அநேகரை கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தவும் உற்சாகப்படுத்தப்பட்டனர். இப்பணித்தளத்தின் சபை ஊழியர் சன்ஜித்திற்காகவும் மற்றும் விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.

மார்ச் 3 : மகய்   கோட்டம்  மசோடி பணித்தளத்தில் பிபரவரி 7ம் தேதி நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் சகோதரி ஜாஸ்மின் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார்; சகோதரி அர்ச்சுனா கூடிவந்தோரை ஜெபத்தில் வழிநடத்தினார். 80-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் இக்கூடுகையில் கலந்துகொண்டனர். தங்களது குடும்பத்தில் பெண்கள் எவ்வாறு சாட்சியாக இருக்கவேண்டும் என்று போதிக்கப்பட்டதுடன், கூட்ட முடிவில் பங்கேற்றோரின் குடும்ப அங்கத்தினரின் இரட்சிப்பிற்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. சபைகளில் பெரும்பாலும் பெண்கள் அதிகமாக ஆண்டவரை அறிந்துகொள்ளுகின்றபோதிலும், வரும் நாட்களில் குடும்பமாக அவர்கள் ஆண்டவரை ஆராதிக்க ஜெபிப்போம்.  

மார்ச் 4 : கிழக்கு மண்டலத்தின் ஜெகனபாத் மாவட்டத்திலுள்ள மதார்பூர் மற்றும் கயா மாவட்டத்திலுள்ள மான்பூர் பணித்தளங்களில், ஜெபிக்கிற சேனையை உருவாக்குவதற்கான 2 நாள் பயிற்சி முகாம் பிப்ரவரி 3 மற்றும் 7 ஆகிய தினங்கள் நடைபெற்றன; இம்முகாமில் சகோ. ஹென்றி மற்றும்    சகோ. ஜெயக்குமார்  கலந்துகொண்டு விசுவாசிகளும் மற்றும் ஊழியர்களும் ஜெப வாழ்க்கையில் வளர பயிற்சியளித்தனர். ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் விசுவாசிகள் தங்கள் சபைக்காகவும், மாவட்டத்திற்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஊக்கமுடன் ஜெபித்தனர். தொடர்ந்து விசுவாசிகள் தங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப ஜெபத்தில் முன்னேற ஜெபிப்போம்.  

மார்ச் 5 : கோடர்மா பணித்தளத்தின் அசனாபாத் கிராமத்தில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது; சகோதரி. சாரா கிராம மக்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனையையும், சுகாதாரத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அத்துடன், கயா சிட்டி சர்ச்சிலும் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. ராஜ்கிர் மற்றும் ராஜொலி பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெற ஜெபிப்போம்.