மே 01 மகய் 2 கோட்டத்தின் மகத் காலனி பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 20 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்; சகோதரி எஸ்தர் பாடல்கள், ஆராதனை மற்றும் ஜெபத்தில் வாலிபரை வழிநடத்தியதைத் தொடர்ந்து, சகோ ஜாஸ்வா கிதியோனின் வாழ்க்கையிலிருந்து வாலிபருக்கேற்ற சத்தியத்தையும் நடைமுறை ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டார். வரும் நாட்களில் பணித்தள ஆலயங்களில் நடைபெறவிருக்கும் வாலிபர் கூடுகைகளுக்காகவும் மற்றும் வாலிபர் மத்தியில் கர்த்தர் அறுவடையைக் கட்டளையிடவும் ஜெபிப்போம்.
மே 02 ஏப்ரல் 18 அன்று சுருக்கி கிராமத்தில் நடைபெற்ற சிறுவர் ஊழியத்தில், பாடல்கள் மற்றும் வேதவசனங்கள் மூலமாக சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவின் அன்பிற்கு நேராக வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். தொடர்ந்து, லோகர்சராய் கிராமத்தின் அரசு பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும், தெளிவான ஆலோசனைகளை மாணவர்களுக்கு எடுத்துக்கூற கர்த்தர் கிருபை செய்தார். சிறுவர் மற்றும் மாணவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாகவும், சமுதாயத்திற்குப் பிரயோஜனமுள்ளவர்களாகவும் வாழ ஜெபிப்போம்.
மே 03 டேட்டார் பணித்தளத்தில் ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 25 விசுவாசிகள் பங்கேற்றனர். விசுவாசிகள் பாரம்பரியப் பழக்கவழக்கங்களிலிருந்து மீட்கப்படவும், வேலைவாய்பிற்காகக் காத்திருப்போருக்கு விரைவில் வேலைவாய்ப்பு கிடைக்கவும், விசுவாசிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.
மே 04 மகய்-1 கோட்டத்தில் தையற் பயிற்சியினை நிறைவுசெய்த 14 சகோதரிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சகோ. ஜெயசீலன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். புதிதாகப் பயிற்சியில் சேரவிருக்கும் மாணவியருக்காகவும், அருகிலிருக்கும் கிராம மக்களின் இரட்சிப்பிற்காகவும் மற்றும் இங்கு காணப்படும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.
மே 05 ராஜ்கிர் மற்றும் ரஜொலி பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகள் தடையின்றி திட்டமிடப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்படவும், கிரிடி பணித்தளத்தில் விரைவில் ஊழியர் இல்லம் கட்டப்படவும், பகட்புர் பணித்தளத்தில் நடைபெறவிருக்கும் ஊழியர் இல்ல மேற்கூரைப் பணிகளுக்காகவும் மற்றும் பிக்ரம் பணித்தளத்தில் காணப்படும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.
